வாழ்வெனும் நிறமற்ற வானவில்லில் எண்ணங்களாலும் செயல்களாலும் நிறம் சேர்த்து அது மழையற்ற வானுக்கும் அழகூட்டும் தருணங்கள் என்றும் இளவேனில் காலங்கள்.
குளிர்காலத்தின் பின்னோடு இளவேனில் வராமலா போய்விடும் என்று தன் கவிதை வரிகளால் நம்பிக்கைகளுக்கு வண்ணம் சேர்த்தவன் முழுகிப்போனான் வண்ணங்களற்ற தண்ணீரில்.
![]() |
P. B. Shelley |
காதல் எனது மதம் - என் மதத்திற்காக மரிக்க நான் தயார் என்று நேசத்துக்கும் நேசிப்பவர்களின் எண்ணங்களுக்கும் வண்ணம் சேர்த்தவன் செத்தான் சிவப்பாய் காசநோய்க்கு. அழிவற்ற நகரத்தில் முடிவற்ற படிக்கட்டுகளின் ஓரமாய் அமைதியாய் இன்றும் நிற்கிறது அவன் இல்லம். எத்தனையோ காதலர்கள் அப்படிக்கட்டுகளை கடந்து செல்கின்றனர் வண்ணங்களை இழந்த அவ்வில்லத்தில் தம் போன்றோருக்காக துடித்த ஒரு வானவில்லை இன்றும் மனதில் கண்ட வண்ணம்...நானும் கடந்தேன் அவ்வண்ணமே.
John Keats |
தான் தீட்டிய ஓவியங்களால் வானவில்களை காண்போர் கண்களிலும் நினைவுகளிலும் நீங்காது மிளிரச்செய்தவன் முறிந்த நட்புக்காக காதறுத்து, பின் முறிந்த சுயத்தினால் தன்னைத்தானே துப் பாக்கியால் சுட்டுக்கொண்டு காணாமல் போனான் தன் விரலாய் மாறி வண்ணங்களை கசியவிட்ட தூரிகையுடன்.
![]() |
Van Gogh |
காதல் போயின் காதல் போயின் சாதல் என்று முழக்கமிட்ட என் முண்டாசுக்காரனும் காணாமல் போனான் கால வெளியில் வேறேதோ வானவில்லை தேடி.
மழை போலே மழை போலே சில ஆன்மாக்களின் நினைவுகளும் பூக்கச்செய்யும் எண்ணற்ற வானவில்களை முடிவற்ற என் மனவெளியில்.
மீண்டுமொரு மழை நாளில் கதிரொளியின் நட்போடு என் கண் முன்னே வானவில் இன்று புதிதாய்...
பெய்யனப்பெய்யும் பெருமழை. அதன் ஒவ்வொரு துளியிலும் இறங்கி என்மேல் பட்டு தெறிக்கும் எனக்கே எனக்கான வானவில் - வண்ணங்களன்றி வேறோன்றுமேயில்லாது !
No comments:
Post a Comment